நினைவேந்தல் சண்டை : காலம் வலியது !

நினைவேந்தல் சண்டை : காலம் வலியது

அது அனைத்து கற்பனைகளையும் தோற்கடிக்கும்.

-Jathi Jathindra

விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் (இராசையா பார்தீபன்) 1987- செப்டம்பர், 15ம் திகதி,  ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து, சாகும் வரை உணவு தவிர்ப்பை முன்னெடுத்து, 12வது நாளில் உயிர்நீத்தார். தமிழர் பகுதிகளில் புணர்வாழ்வளிப்பு என்னும் பெயரிலான சிங்கள குடியேற்றங்கள் அனைத்தையும் நிறுத்துதல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளின் விடுதலை, இடைக்கால நிர்வாக சபையொன்றை நிறுவும் வரையில் புணரமைப்பு திட்டங்கள் அனைத்தும் நிறுத்துதல், வடக்கு கிழக்கில் புதிய பொலிஸ் நிலையங்களை நிறுவுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும், வடக்கு கிழக்கிலிருந்த (அப்போது கிழக்கில் முஸ்லிம்கள்தான் ஊர்காவல் படை என்னும் பெயரில் தமிழர்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டிருந்தனர்) ஊர்காவல் படையினரை நிராயுதபாணிகளாக்குதல், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து படையினர் மற்றும் பொலிசாரை வெளியேற்றுதல் - இந்தக் கோரிக்கைகளுடன்தான் திலீபன் தனது உணவு தவிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார். இப்போது சிலர் உளறிக் கொண்டிருப்பது போன்று, தீலிபன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தோ அல்லது 13வது திருத்தச்சட்டத்தை எதிர்த்தோ தனது போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. ஏனெனில் அவ்வாறான கோரிக்கைள் எவையும் அவரால் முன்வைக்கப்படவில்லை.

தீலிபனின் உரைகளில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பிலும் இந்திய படைகள் தொடர்பிலும் பேசப்பட்டிருக்கின்றது. அன்றைய சூழலில் இந்திய எதிர்ப்பை பரவல்படுத்துவதில் குறித்த உணவுதவிர்ப்பு நடவடிக்கை பயன்பட்டது என்பது உண்மைதான். இப்போது கேள்வி : அவ்வாறாயின் இப்போது தீலிபனை முன்னிறுத்தி அரசியல் செய்ய முயற்சிப்பவர்கள் தங்களின் இந்திய எதிர்ப்பிற்காகவா இதனை கையிலெடுக்கின்றனர்? மீண்டும் வடக்கில் இந்திய எதிர்ப்பை பரவல்படுத்துவதுதான் அவர்களது நோக்கமா? (சைக்கிள்) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு இந்திய எதிர்ப்பு அரசியல் கட்சியா? நான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதை பயன்படுத்தவில்லைஏனெனில், மணிவண்ணன் அணியும் அதற்கு உரிமைகோருகின்றது. தீலிபனை நினைப்பதற்கு பின்னால் இருப்பது இந்திய எதிர்ப்புத்தான் என்றால், இந்தியாவை பகிரங்கமாக எதிர்ப்பதில் என்ன தடையுண்டு? விடயம் இங்கு இந்திய எதிர்ப்போ அல்லது கொள்கையோ அல்லமாறாக, தேர்தல் அரசியலை தக்கவைக்க வேறு எதுவும் இல்லை. மக்கள் மத்தியில் போவதற்கு ஒரு துருப்புச் சீட்டு தேவைப்படுகின்றது. அவ்வளவுதான். மற்றைய அனைத்தும் ஏமாற்றும் சொற்கள்.

1988இல் நிறுவப்பட்ட தீலிபனின் உருவச் நிலை, 1996இல் இராணுவத்தினரால் இடிக்கப்பட்டது. பின்னர், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான சமாதான உடன்பாட்டு காலத்தில்தான், தீலிபனின் நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட்டது. ஆனால் அந்தக் காலத்தில், தீலிபனை வைத்து எவரும் சண்டையிட்டதான செய்திகள் வெளியானதில்லை. இப்போதுதான் இவ்வாறான அசிங்கங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணியினரோ ஒரு போதும் இவ்வாறான வியாபார அரசியலில் ஈடுபட்டதாக நான் அறியவில்லை. ஏன் - ஜனநாயக போராளிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கூட இவ்வாறான சண்டைகளில் ஈடுபடவில்லை. உண்மையில் அவர்கள்தான் தீலிபனை முன்வைத்து அரசியல் பேசியிருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் அதற்கான உரித்துமுண்டு.

பொதுவாகவே, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணியினர் மட்டும்தான், இவ்வாறான முட்டி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினராக அறியப்படும் பசீர் காக்கா இது தொடர்பில், அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில் தமிழ் காங்கிரஸையே விமர்சித்திருக்கின்றார். அவரது கோரிக்கை நியாயமானது. அதாவது தீலிபனை நினைப்பதில் கட்சியரசியலை கலக்க வேண்டாம். இதனை ஒரூ பொது அமைப்பே முன்னெடுக்க வேண்டும். ஆனால் பொதுக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று சைக்கிள் அணியினர் கூறுகின்றனர். நண்பர் யோதிலிங்கம் போன்ற அரசியல் ஆய்வாளர்களும் பொதுக் கட்டமைப்புக்கே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். உண்மையில் தீலிபனின் நினைவை, தங்களின் வாக்கு அரசியலுக்கு பயன்படுத்துவது மிகவும் அசிங்கமானது. மேலும் நினைவுகூர்தல் என்பது, எவர் மீதான திணிப்பாகவும், உத்தரவாகவும் இருக்கக் கூடாது. உத்தரவுகளுக்கு கட்டுப்படும் நினைத்தலென்பது சர்வாதிகாரத்தின் நிழலாகும். உண்மையில் நினைவுகூர்தலென்பது, மக்கள் மத்தியிலிருந்து இயல்பாக எழவேண்டிய ஒன்று. ஒரு வேளை - அரசியல்வாதிகள், தங்களின் தேர்தலுக்காக இவற்றை பயன்படுத்தாதுவிட்டிருந்தால் -  ஒரு வேளை மக்கள் இவற்றின் மீது இயல்பான ஈடுபாட்டை காண்பித்திருக்கவும் கூடும். ஆனால் இதனை நான் உறுதியாக கூறமாட்டேன். 

தீலிபன் உண்ணா நோன்பிருந்த காலத்திற்கும் இன்றைய காலத்திற்குமிடையில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமுண்டு. தீலிபன் என்றால் - இதயத்திற்கு நெருக்கமானவன் என்று எழுதியிருக்கின்றார் திரு மாஸ்டர். அவ்வாறாயின் தீலிபனை நினைத்துக் கொள்ள விரும்புவர்கள் இதயத்திற்கு நெருக்கமாகவல்லவா சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும்.

இயக்க அரசியல் வரலாற்றில் - தீலிபன் ஒருவர்தான், உண்ணாநோன்பிருந்து சாவை தழுவியவராவார். வேறு எவருக்கும் அவ்வாறான வரலாறில்லை. அதனை அப்படியே விட்டுவிட வேண்டும். அந்த வரலாற்றக்குள் காங்கிரஸ் காரர்களின் தேர்தல் மோகத்தை கலந்து, அதன் தூய்மையை மாசுபடுத்த வேண்டியதில்லை. இது தொடர்பில் தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும். தொடர்ந்தும் இவ்வாறான அசிங்கங்களை விதைக்க முற்படுவர்களை அனுமதித்துக் கொண்டிருக்கக் கூடாது.

திலீபனை வைத்து மற்றவர்கள் அரசியல் சீவியம் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் புதிதாக ஒன்றைச் செய்து, அதனைக் கொண்டு உங்களுக்கான வரலாற்றை எழுதுங்கள். ஆனால் இங்கு என்ன நடக்கின்றது? யாரோ செய்ததை தங்களின் தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதும், தங்களுக்கு மட்டும்தான் சில விடயங்கள் சொந்தமானதென்றவாறு, உரிமைகோருவதும் எந்த வகையில் தீலிபனுக்கான மரியாதையாக இருக்க முடியும்? உண்மையில் அரசியலில் சொந்தமாக எதனையுமே செய்ய முடியாதவர்கள்தான், இவ்வாறு, மற்றவர்களின் தியாகங்களுக்கு உரிமைகோரிச், சண்டையிடுகின்றனர்.

சில விடயங்கள் அரசியலில் காலாவதியாகிவிட்டது. தங்களுடன் உடன்பட மறுப்பவர்களை, எதிர்ப்பவர்களை துரோகியென்பது, ஒட்டுக்குழுவென்பது, கூலிப்படையென்பது, உளவு முகவரென்பது - இவ்வாறான சொற்களின் வழியாக தங்களை புனிதராக்கிக் கொள்ளும் அரசியல் காலாவதியாகிவிட்டது. இன்று தமிழர்கள் வந்து சேர்ந்திருக்கும் இடத்திற்கு பொறுப்பானவர்களாக எவர் மீதாவது, பழிபோட வேண்டுமென்றால்,  அனைவர் மீதும்தான் பழிபோட நேரிடும் - இல்லாவிட்டால், நமது கடந்த காலத்தை ஒரு நல்ல அனுபவ-ஆசானாக்கிக் கொண்டு, அதிலிருந்து கற்றுக் கொண்டு, பயணிப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

காலம் வலியது என்பதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். காலத்தின் இரக்கமற்ற நகர்வுகளுக்கு முன்னால் நமது கற்பனைனகள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை உணர்ந்து செயற்படாதவரையில் தமிழ் மக்களுக்கு வீமோசனமில்லை.


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post