ஒரு நாடு இரு தேசமா? 13+ஆ? பொன்சேகா கொடுத்த வாக்குறுதி என்ன?

 

-பாரி

 பொதுவாக ஆங்கிலேயர்கள் 13ம் இலக்கத்தை துரதிஷ்டவசமானது என்றே நம்புகிறார்கள். அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் என்ற பெயருடனேயே தேர்தல் திணைக்களத்திலும் பாராளுமன்றத்திலும் அடையாளப்படுத்தப்படும் கட்சியானது இந்தப் 13 என்னும் நூலில் தான் இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒலி வாங்கியைக் கையிலெடுக்கும் இக் கட்சியினரோ கூடியிருப்போருக்கு வணக்கம் சொல்ல மறக்கிறார்களோ இல்லையோ 13 உச்சரிக்கத் தவறுவதில்லை.

தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகன் கட்டளைத் தளபதியாக இருந்து மாவீரர் துயிலுமில்லத்தில் முதன்மைச்சுடரேற்றிய அதே இடத்தில் இரு மாவீரர்களின் (பிரிகேடியர் தீபன்,லெப்.கேணல் ஹில்மன்) தந்தை என்ற நிலையில் முதன்மைச் சுடரேற்றிய தந்தை என்ற வரலாற்றைக் கொண்ட கந்தையா வேலாயுதம் அவர்களின் இறுதி நிகழ்வில்தான் இந்தப் 13 என்ற விடயம் உச்சரிக்கப்படவில்லை.

இதற்காக கஜேந்திரகுமார் கஜேந்திரனைக் கடிந்து கொண்டிருப்பார் என நம்பலாம். கடந்த ஆண்டு திலீபன் நினைவு நாட்களில் 13 எதிர்த்து அவன் உண்ணாநோன்பு மேற்கொண்டான் என்று கூடச் சொன்னார்கள். இந்த முகநூல் விற்பன்னர்கள் அப்படியும் இருக்கலாம் என நம்பினார்கள். அந்தளவுக்கு 13 இந்தக் காங்கிரஸ் கட்சியைப் பின் தொடர்வோர் வாழ்வில் இரத்தமும் சதையுமாகப் பின்னிக்கிடக்கிறது. இன்று 13 ம் திருத்தத்தைப் பிக்குகள் எதிர்க்கிறார்கள் - எரிக்கிறார்கள் என்ற செய்திகள் வரும்போது தாங்கள் ஏதோ பற்றற்ற ஞானிகள் போல உபதேசம் செய்கிறார் கஜேந்திரகுமார்.

 இறுதி யுத்தத்தின் பின்னர் 26 ஜனவரி 2010 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. சிங்களத்தரப்பில் யுத்தத்தை வழிநடத்திய பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எதிரணியின் சார்பில் போட்டியிட்டார். இவரை ஆதரித்து சம்பந்தன் ஐயா கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் கஜேந்திரகுமாரும் பத்மினிசிதம்பரநாதனும் கலந்து கொண்டனர்.

இந்த இருவருக்கும் 13 பிளஸ் பற்றியோ, ஒரு நாடு- இருதேசம் குறித்தோ என்ன வாக்குறுதியை சரத்பொன்சேகா தந்தார் என்று இக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விளக்கம் தந்தால் நல்லது. ஏனெனில் " கொண்ட இலட்சியம் குன்றிடா நெஞ்சினில்....." என்று சொல்லாத குறையாக கஜேந்திரகுமாரைத் துதிபாடும் உரைகள் காதைக் கிழிய வைக்கின்றன. இவர்கள் தமது கட்சியினர் ஏகமனதாக சரத்பொன்சேகாவின் விடயத்தில் என்ன தீர்மானித்தனர் என அறிந்து கொள்வது நல்லது.

 ஏனெனில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் .பி.ஆர்.எல்.எவ்வுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கையில் "போராடப் புறப்பட்டு உயிர்நீத்த அனைவருமே மாவீரர்கள் தான்" என்று தாங்கள் ஏகமனதாக முடிவெடுத்ததாக கஜேந்திரகுமார் கூறிய விடயம் குறித்த காணொளி அந்தக் காலத்தில் வெளியாகவில்லை. அது கடந்த மாவீரர் நாள் காலத்தில் தான் வெளியானது. உண்மையில் .பி.ஆர்.எல்.எவ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடச் சம்மதித்திருந்தால் அவர்களின் இயக்கத்தில் இணைந்து உயிர்நீத்தவர்களை "மாவீரர் பட்டியலில் இணைத்து விட்டோம்" என்றே அன்று பிரகடனப்படுத்தியிருப்பார் கஜேந்திரகுமார். அந்தக் கூட்டு சாத்தியமாகவில்லை என்றதும் " இவர்கள் மண்டையன் குழுவினர் " என்று திட்டித் தீர்த்தனர். இந்தக் குழுவினருடன் இணைந்தே தான் ஓரே பட்டியலில் 2004 தேர்தலில் தாங்களும் போட்டியிட்டு முதன்முறையாகப் பாராளுமன்றம் சென்றனர் என்பதை மறந்து விட்டனர் இவர்கள்.

 அந்தத் தேர்தலில் இன்னொரு கோளாறும் இடம்பெற்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் விடயத்தில் குறிப்பிட்ட சபை எல்லைக்குள் வாக்காளராகப் பதிவினை மேற்கொண்டவர்களே போட்டியிட முடியும். ஒரு வட்டாரத்தில் போட்டியிடுபவர் தான் பெரும்பாலும் உள்ளூராட்சி சபைத் தலைவராகப் பெயரிடப்படுவார். மணிவண்ணன் எந்த வட்டாரத்திலும் போட்டியிடவில்லை. குறிப்பாக இவர்  கொக்குவிலைச் சேர்ந்தவர் என்ற வகையில் நல்லூர் பிரதேசசபையிலேயே போட்டியிட முடியும் எனச் செய்திகள் அடிபட்டன. ஆனால் மணிவண்ணனையே முதன்மை வேட்பாளராக அறிவித்தது இக்கட்சி. தேர்தல் முடிந்ததும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் போனஸ் உறுப்பினர்களில் ஒருவராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது. இவர் மாநகர முதல்வர் தெரிவுக்கும் போட்டியிட்டார். தமிழர் அரசியலில் கோளாறு திலகம் என வர்ணிக்கப்படும் சுமந்திரன் இவரது உறுப்புரிமையை கேள்விக்குட்படுத்தும் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மணிவண்ணனின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டது. பின்னர் கஜேந்திரகுமார் - மணிவண்ணன் முரண்பாடு வெளியானதைத் தொடர்ந்து சுமந்திரன் அந்த வழக்கை மீளப் பெற்றார். இதனால் உறுப்பினர் அந்தஸ்தை அடைந்த மணிவண்ணன் பின்னர் மேயரானார்.

 இந்த இடைப்பட்ட காலத்தில் மணிவண்ணன் யாழ்.நகரசபைக்குள் தான் வசித்தார் என நிறுவ பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் கருணா " ஒரு இரவில் இரண்டாயிரம் படையினரை ஆனையிறவில் நாம் கொன்றோம்" என்றார். உடனேமணிவண்ணன் கருணா மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். கருணா பின்னர் துரோகியானாலும் ஆனையிறவைப் பொறுத்தவரை புலிகளின் தளபதிகளில் ஒருவராக விளங்கினார். அந்த நடவடிக்கைக்குப் புலிகள் இயக்கமே பொறுப்பு. புலிகளின் நடவடிக்கைகளுக்காக அரசு என்ன செய்ய வேண்டும் என மணிவண்ணன் விரும்பினார்?  மணிவண்ணனின் கோரிக்கை அவரது தனிப்பட்ட கருத்து என்று சொல்ல கஜேந்திரகுமாரும் முயலவில்லை. பின்னர் ஏன் தாங்கள் 24 கரட் தேசியவாதிகள் என நிறுவ படாதபாடுபடுகின்றனர்?.

 இன்று ஊழல் வாதிகளின் கூடாரமாக விளங்குகிறது யாழ் மாநகரசபை என்று அழுகிறார் காங்கிரசின் முதன்மை வேட்பாளர் தீபன் தீலிசன். திலீபன் நினைவு நாட்களில் " போராளிகள் எமக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை" என்று திமிருடன் கூறியவர் இவர். ஆண்டு தோறும் மாவீரர்நாட்களில் துயிலுமில்லங்களின் பெயரால் பல இலட்சங்களை ஏப்பம் விடும் கட்சியிலிருந்து கொண்டு தான் இவர் இவ்வாறு கூறுகிறார். மாநகரசபை ஊழல்வாதிகளின் கூடாரம் என்றார். காங்கிரஸ் கட்சி அந்த ஆட்களின் மாளிகை. "வறுமை காரணமாகவே பெரும்பாலான இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்" என்று கொச்சைப்படுத்தியவரைத் தலைவராகக் கொண்ட கட்சியிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

வெளிநாட்டில் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லும் கூட்டத்துக்கு தாயகத்தில் பொய்யுரைக்க ஒரு முகவர் தேவை. அதற்கு காங்கிரஸ் கட்சியினரே பொருத்தமானவர்கள்.

 இதற்குள் நாளாந்தம் 13 வது சட்டத்திருத்தம், ஒரு நாடு - இரு தேசம் என்று கோஷங்கள் வேறு. முதலில் இந்த இரு தேசங்களில் எந்தத் தேசத்தில் உங்களது முதலீடுகள், சொத்துக்கள் கூடுதலாக உள்ளன என்று யாராவது கட்சித்தலைமையிடம் கேட்பார்களா? முடியாது. முதுகெலும்பு இல்லாதவர்களின் மாளிகை தானே இந்தக்கட்சி. எப்போதும் எந்தப்பகுதியில் தமது சொத்துகள் கூடுதலாக உள்ளனவோ அந்தப்பகுதியினரின் நலன்களை முதன்மைப்படுத்துவது தானே மனித இயல்பு. விமல் வீரவன்சவும் பிக்குகளும் 13ஐ எதிர்க்க ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். கஜேந்திரகுமார் வேறு ஒன்றைச் சொல்கிறார். விளக்கங்கள் வேறுவேறாக இருந்தாலும் நோக்கம் அந்தத்தரப்பின் பக்கமாகவே சாய்கிறது.

எதையும் பிளான் பண்ணித்தான் செய்ய வேணும்" என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார். அதைத் தான் கஜேந்திரகுமார் பின்பற்றுகிறார் என்பது புரிகிறது. 

இறுதியாகக் கிடைத்த செய்திகளின் படி "ஓற்றையாட்சி நாட்டில் சமஸ்டிக்கு இடமில்லை. இலங்கையில் வாழ முடியா விட்டால் லண்டனுக்குத் தான் ஒட வேண்டும்" என்பது சரத்பொன்சேகாவின் அறிவுரை. இதை ரகசியமாக 2010 இல் கஜேந்திரகுமாருக்கும் அவர் சொல்லியிருக்கிறார் போல உள்ளது.

காங்கிரஸ் கூறும் இரு தேசங்களிலும் மாவட்ட  வைத்தியசாலைக்குரிய வசதிகள் உள்ள 26க்கு மேற்பட்ட  ஆஸ்பத்திரிகள் இருந்த போதும் தனது வாரிசு மாட்சிமை தங்கிய எலிசேபத் மகாராணியின் பிரஜையாகத் தான் பிறக்க வேண்டும் என்று பிளான் பண்ணித் தான் செயற்பட்டிருக்கிறார் கஜேந்திரகுமார். வாழ்த்துக்கள்

  மக்களுடனேயே எமது கூட்டு என்ற இவர்களது கருத்து பற்றி அடுத்த பதிவு வெளிவரும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post