ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டதில் களப் பலியான தியாகி நடராஜா !


அவர்களது 66 வது நினைவு நாள் இன்று

இலங்கை மண்ணில் முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்த தமிழர்களின் ஆயுதப்போர் முடிவுக்கு வந்தாலும் அந்த போர் தொடங்கியதற்கான காரணம் இன்னும் காணாமல் ஆக்கப்படவில்லை

அத்தோடு இலங்கை மண்ணில் தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கான நியாயமான போராட்டத்தில் அறவழியில் போராடி 1957 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாலாம் நாள் முதல் களப் பலியான  தியாகி நடராஜா  ஐயா அவர்கள் வீழ்ந்த திருகோணமலை மண்ணே

பின்னால் வந்த ஆயுதப் போராட்டத்திற்கு தலைமைகளை உருவாக்காவிட்டாலும் அதே ஆயுதப்போராட்டத்தின் முதன்மை தளபதிகளுக்கு உருக்கொடுத்தது. 

அந்த வகையில் திருமலை மண்ணின் மட்டுமல்லாது ஈழ தேசத்தின் முதன்மை அறப் போராளியாக களப்பலியான தியாகி நடராஜா ஐயா அவர்களைப் பற்றிய வரலாற்றை இங்கே பதிவாக்குகின்றேன். 

இலங்கையின் மலையகத்தில் பிறந்து எங்கள் திருகோணமலை மண்ணில் சிறுவயது முதலே வாழ்ந்து எமது மண்ணுக்கு சொந்தமாகிப் போன  ஐயா தியாகி நடராஜா அவர்கள் எனது தாயரின் வீட்டில் இருந்தவராதலால் அவரைப்பற்றி பலரும் அறியாத பல விடயங்களை உள்ளடக்கி

10/02/1957ம் ஆண்டு வெளிவந்த  சுதந்திரன் பத்திரிகையை ஆதாரமாக கொண்டு என் இந்த பதிவினைத் தொடர்கின்றேன். 

எனது தாயரின் தாய் வழிச் சிறிய தந்தையாரான சிவசண்முகராசாவிடம் Brooke Bonds தேயிலை கொம்பனி உரிமத்தில் அவரிடம்  வேலை செய்த

ஐயா அவர்கள், கலைஞர் கருணாநிதி மீது பற்றுக் கொண்டு, கலைஞர் படத்தை தனது அறையில் மாட்டி வைத்து அந்த கலைஞர் வழி நடப்பவராவார்.

இது மட்டுமல்லாது அந்த கலைஞரின் கூண்டுக்கிளி வசனத்தை பேசுவதையும் தன் பொழுது போக்காக கொண்ட ஐயா நடராஜா அவர்கள் காலத்துக்கு ஏற்ற மற்றைய இளைஞர்கள் போல் வாழ்க்கையின் வட்டத்துக்குள் வாழ்ந்தாலும்,

கலைஞர் கருணாநிதி மீதிருந்த அதீத பற்றுதலால், அந்த கலைஞர்  போன்று போராடும் குணத்தையும் அவருக்குள் கொண்டிருந்தார்.

அதிலும் குறிப்பாக கலைஞர் கருணாநிதி நடத்திய கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் ஐயாவின் மனதில்  ஏற்படுத்திய பெருந்தாக்கம் எங்கள் திருகோணமலை மன்ணில் எங்கள் திருகோணமலை மக்களால்

1957ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாலாம் நாள்  நடத்தப்பட்ட கறுப்புக்கொடி போராட்டத்தில் பங்கு கொள்ளும் வல்லுறுதியை அவருக்குத் தந்திருந்தது.

1956 ம் ஆண்டு இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தினை எதிர்த்து வெகுண்டெழுந்த எம் திருகோணமலைத் தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரதினத்தை துக்க நாளாக அனுஷ்டிக்க தமிழரசுக் கட்சியின் அன்றைய திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு என் ஆர் இராஜவரோதயம் ஐயா தலைமையில் ஊர்வலமாக சென்றனர். 

இந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட  ஊர்வலத்தில் ஐயா இராஜவரோதயத்துடன் ஊர்காவல் துறை பாராளுமன்ற உறுப்பினர் வி..கந்தையா, கப்டன் கனகசிங்கம் மற்றும் Drதுரைநாயகம் அவர்கள் முன்நின்று நடத்தினர்.

இதனை முன்பே அறிவித்து அன்றைய அரசாங்க அதிபர் மெய்க்கேஷர் (Mckeizer) அனுமதியுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த ஊர்வலம்   திருகோணமலை நகர சபை காரியாலயத்தை அடைந்ததும் அன்றைய நகரசபைத் தலைவரான . ஏகாம்பரம் ஐயா அவர்களால் கறுப்புக்கொடி நகரசபையிலும் ஏற்றப்பட்டது.

அதன் பின்னரும் தொடர்ந்த அந்த ஊர்வலம் திருகோணமலை நகர சபைக்கு சொந்தமான மணிக்கூட்டு கோபுரத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்ட பின்னர்  காளி கோவில் முன்றலில் மாபெரும் கூட்டத்துடன்  நிறைவு பெற்றது.  

அந்த கூட்டத்தில் ஐயா இராஜவரோதயம் பேசிக் கொண்டு இருக்கும் போது,  மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்த கறுப்புக் கொடி சிங்களவர்களால் அகற்றப்பட்டு சிங்கக் கொடி ஏற்றப்படுவதாக வந்த செய்தி மொத்தக் கூட்டத்தையும் மணிக்கூட்டு கோபுரம் இருந்த சந்தைபகுதியை நோக்கி திரளவைத்தது.

இதில் நடந்த களேபரத்தில் சிங்கக் கொடியை அகற்றி கறுப்புக் கொடியை மீண்டும் ஏற்ற முயன்ற வீரப்போராளி தியாகி நடராஜா மீது  சந்தையின் கட்டிடப் பகுதியில் பதுங்கி இருந்த  சிங்களவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுடன் முடிவடைந்து,

அந்த ஊர்வலத்தில் போராட்ட பங்காளியாக கலந்து கொண்ட  போராளி ஐயா தியாகி நடராஜாவின் உயிரைப் பறித்து மேலும் சிலரைகாயப்படுத்தியது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டதாக  எல் ஜி இமானுவல் சில்வா என்ற சிங்களவர் கைது செய்யபட்டாலும் அவர் தண்டணை இன்றி அரசால் விடுவிக்கப்பட்டார் என்பது சிங்கள பெளத்த பேரினவாத மனநிலையை காட்டுகின்றது என்பதை பதிவு செய்து  தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையிலான முதல் ஜனநாயக போரட்டத்தில் சிங்களப் பேரினவாதத்தால் கொல்லப்பட்ட  தியாகி நடராஜா ஐயாவிற்கு வீரவணக்கம் செலுத்தி என் இந்த பதிவை தமிழ் இனப்போராளிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் ஆக்குகின்றேன்.

நன்றி ; சுவாமி சங்கரானந்தா

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02m3jgNWbohjDrGSZCi62QpvJhvi7K83qbA18i34DNBVnp3z8E8gwRd2c6veMGdPNsl&id=525313454&mibextid=unz460

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post