சென்னை விமான
நிலையத்தில், அங்கிருந்த அறிவிப்பு காட்சிப்பலகையில் Dubai, Singapore, Sharjah,
Colombo, Kuala Lumpur ஆகிய பெயர்களுடன் அதே
சமவரிசையில் நமது யாழ்ப்பாணம் இடம் பெற்றிருந்தது. அதைப் பார்க்கும்போதே ஒரு இனம் புரியாத
புல்லரிப்பு... ஆஹா.. ஈழத்தமிழர்களின் எத்தனை ஆண்டு காலக் கனவு இது... யாழ்ப்பாண சர்வதேச
விமான நிலையத்தை சாத்தியமாக்கித் தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது அரசாங்கத்திற்கும்
நாமெல்லாம் முதலில் நன்றி சொல்ல வேண்டும் (ஈழப்போர்களுக்கெல்லாம் முன்னர், முன்னொரு
காலத்தில் பலாலி இந்திய விமான சேவை இருந்தது.. ஆனால் சர்வதேச தரவரிசையில் பலாலி விமான
நிலையம் இருக்கவில்லை.)
விமானத்துள்
ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழிலும் அறிவிப்புக்களைச் செய்தார்கள். (சிங்களம் மிஸ்ஸிங்)
தமிழ் அறிவிப்பையும் "ஜெய் ஹிந்த்"
என்று சொல்லித்தான் முடித்தார்கள். சென்னையிலிருந்து வெறுமனே ஒரு ஒன்றேகால் மணி நேரப்பயணத்தில்
யாழ்ப்பாணத்தை அடைந்தாயிற்று.
நாம் பயணம்
செய்த விமானம் ஒரு சிறிய விமானம். இருபுறமும் விசிறிகள் கொண்ட அந்தக் கால விமானம் அது.
72 பயணிகளுக்குக்குத்தான் அதில் இருக்கைகள் உண்டு. நான் வந்த விமானத்தி;ல் பயணித்தவர்களில்
ஓரிருவரே புலம்பெயர் ஈழத் தமிழராகக் காட்சியளித்தனர். வெள்ளையர் யாருமில்லை.. மற்றவர்கள்
அனைவரும் ஈழத் தமிழர்.. எளிய மனிதர்கள். புலம்பெயர் ஆர்ப்பாட்ட நடை உடை பாவனைகள் அலப்பறைகள்
அறவே அற்ற சாதாரணர்கள். ஒவ்வொரு முகமும் ஆயிரம் கதை சொல்லியது.. என் அருகே உட்கார்ந்திருந்த
சிறுவனின் குதூகலத்தை காணக்கண் கோடி வேண்டும்.
தற்போது ஒரு
இந்திய விமான நிறுவனமே இந்தியா – யாழ்ப்பாணம் விமான பயண சேவையை நடத்துகிறது. யாழ்ப்பாண
சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மேம்படுத்தப்பட்டால்தான் பெரிய விமானங்களும் சேவையிலீடுபடச்
சந்தர்ப்பம் கிட்டும். (அதையெல்லாம் முனைப்பெடுத்துச் செய்ய வைக்க வேண்டியது ஸ்ரீலங்கா
அரசும், வடக்கு மாகாண சபையும்தான்... ஆனால் செய்வதாக இல்லை.. பூனைக்கு மணி கட்டுவது
யார்?)
ரன்வே
விஸ்தீகரிக்கப்பட்டால் இந்தியா தவிர வேறு நாடுகளும்
தமது விமானங்களைப் பலாலியில் தரையிறக்கலாம். அதுவரை ஒருவித வீம்புக்காக குறைந்த பட்சம் இந்த வகையிலான பயணிகள்
விமானங்களை வைத்துத்தான் இந்த விமான நிலையத்தை
பலாலியில் உயிரோடு வைத்திருக்க முடியும். அதைத்தான் இந்தியா செய்கிறது. "Connecting
India" அல்லது
"Connecting Jaffna"..!!
விமானத்தில்
வந்தவர்களில் பெரும்பான்மையினரும் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்ததால் அவர்களுக்கு இமிகிரேஷன் சடங்குகள் பத்து நிமிடங்களுள் முடிந்து விட்டன. வேற்று நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டும் சில நிமிடங்கள் அதிகம்
காத்திருக்க நேர்ந்தது. அவ்வளவுதான். பயணிகளிடம் அதிக கேள்விகள் கேட்பதற்கு
எதுவுமில்லா இமிகிரேஷன், கஸ்டம்ஸ் அதிகாரிகள் பணியிலிருந்தார்கள். மிகவும் பண்பான வகையிலான பேச்சு அவர்களது! (அமெரிக்க விமானநிலைய அதிகாரிகளே.. பயணிகளிடம் பணிவாகப் பேச வேண்டுமா?? யாழ்ப்பாண
விமான நிலையத்தில் கற்றுக் கொள்ளுங்கள்..)
எனக்கான குடிவரவு சம்பிரதாயங்கள் முடிவடைந்ததும் அதே கட்டிடத்தின் ஒரு
மூலையில் கொணர்ந்து வைக்கப்பட்டிருந்த (சுழன்று சுழன்றுவரும் பெல்ட் கிடையாது) எனது சூட்கேஸ்களை எடுத்துக்
கொண்டு கட்டத்திற்கு
வெளியே வர.. அங்கு - இந்த
சர்வதேச விமான நிலையத்தின் வாசலுக்கு நேரே - ஒரு விஐபிக்கு காத்திருப்பதுபோல
எனது தம்பியின் வாகனம் எனக்காகக்
காத்துக் கொண்டிருந்தது. எட்றா வண்டியை... நேரே வீடு... "காலையில்
மெட்ராஸில் காப்பி.. மத்தியானம் மூளாயில் விருந்து.. எங்கேயும் எப்போதும்... இன்பமயம்..."
யாழ்ப்பாணத்தின்
மேலாக விமானம் கீழிறங்கும்போது வானத்திலிருந்து பார்த்தேன்.. அமைதி... யாழ்ப்பாணப் பகுதியின் வயல்கள், மரங்கள் பனைகள், அடக்கமான கட்டிடங்கள்.. ஆங்காங்கே கோயில்கள், அவற்றின் கோபுரங்கள்... இப்படியொரு சந்தர்ப்பம் நம் வாழ்நாளில் வருமா
என்று ஈழத்தமிழனாய் நான் காத்திருந்த பயணம்
இது. சிங்களத்தீவினுக்கோர் விமான வழிப் பாலம் அமைப்போம்... என இன்று பாரதி
பாடியிருப்பாரோ.. பயணிகள் விமானங்களில் எத்தனையோ முறை பறந்தாயிற்று. ஆனால்
இந்தப் பயணத்தில் விமானம் தரையிறங்கும்போது நான்
அடைந்த உணர்வு அசாதாரணமானது. அந்த உணர்வானது எனது
இருக்கை வரிசையில் அமர்ந்திருந்து குதூகலித்த சிறுவனின் குதூகலத்துக்கு இணையானது.. ஆத்மார்த்தமானது..
நன்றி
.V ravi (facebook)
Post a Comment