தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர்?

-இரா.துரைரத்தினம். ( ஊடகவியலாளர் )

 தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் (#சிறிதரன் அவர்கள், #சுமந்திரன் அவர்கள்,#யோகேஸ்வரன் ஐயா அவர்கள்) .............. எனது வாழ்த்துக்கள்.

நீண்டகாலத்திற்கு பிறகு தமிழரசுக்கட்சியின் தலைமை பதவிக்கு போட்டி நடைபெற இருக்கிறது.

இலங்கையில் பழமையான தமிழ் கட்சிகள் இரண்டு உள்ளன. ஒன்று  அகில இலங்கை தமிழரசுக்கட்சி. மற்றயது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, இந்த இரு கட்சிகளும் தான் ஜனநாயக வழியில் வந்த கட்சிகள்.

இது தவிர இப்போது ஆங்கில எழுத்துக்களை கொண்ட ஆயிரத்தெட்டு ஆயுதக்குழுக்களும் ஒவ்வொரு கட்சிகளை வைத்திருகின்றன. இவர்கள் சொந்த முகத்துடன் மக்கள் முன் வரமுடியாதவர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு ஒரு கூட்டமைப்பு பெயரில் முகமூடியை அணிந்து கொண்டுதான் மக்கள் முன் வர முடியும். ஆயுதக்குழுக்களை கணக்கில் எடுக்கத்தேவையில்லை.

ஆயுதக்குழுக்கள் தவிர்ந்த தமிழ் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகிய கட்சிகளால் மட்டுமே தமது சொந்த முகத்துடன் மக்கள் முன் வர முடியும்.

இந்த இரு கட்சிகளில் வடக்கு கிழக்கில் அதிக மக்கள் ஆதரவு கொண்ட கட்சியாக விளங்குவது தமிழரசுக்கட்சி மட்டும் தான். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு யாழ்ப்பாணத்திற்கு வெளியே ஆதரவு தளம் கிடையாது.

எனவே வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பலம் மிக்க அரசியல் தலைமையாக விளங்குவது தமிழரசுக்கட்சிதான். எனவே தான் தமிழரசுக்கட்சியின் தலைமை பதவி என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இதை எழுதுவதால் நான் தமிழரசுக்கட்சியை சார்ந்தவன் என எண்ணுவது தவறு. தமிழரசுக்கட்சியில் எந்த காலத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை. தமிழரசுக்கட்சியில் மட்டுமல்ல எந்த ஒரு கட்சியின் உறுப்பினராகவும் இருந்தில்லை.

ஆனால் தமிழ் மக்களுக்கு பலமான அரசியல் தலைமை ஒன்று அவசியம் என்ற நிலைப்பாட்டை கொண்டவன். தமிழரசுக்கட்சியே தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற நிலைப்பாட்டிலும் உள்ளவன்.

எனவே தான் தமிழரசுக்கட்சியின் தலைமை பதவி முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்..சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இருவரும் 60வயதிற்கு உட்பட்டவர்கள். பாராட்டுக்கள். பழம்பெரும் கட்சியின் தலைமை பதவிக்கு இருவரும் பொருத்தமானவர்கள் தான்.

கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் ஒருவரை தலைவராக தெரிவு செய்வார்கள். யாரை தெரிவு செய்வது என்பதை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். அதில் வெளியார் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் கிடையாது

ஆனால் இதை வைத்துக்கொண்டு தமிழரசுக்கட்சியை சாராத சில ஆயுக்குழுக்களை சார்ந்த சிலரும் வெளிநாடுகளில் உள்ள சிலரும் தமிழரசுக்கட்சிக்குள் மோதல்களையும் குழப்பங்களையும்  உருவாக்க சூழ்ச்சி செய்து வருகின்றனர்.

இந்த சூழ்ச்சிகளில் தமிழரக்கட்சியினர் சிக்கி விடக்கூடாது. இந்த விடயங்களில் தமிழரசுக்கட்சியினர் மிக நிதானமாக நடந்து கொண்டு தாம் விரும்பும் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களில் இரு தரப்பாக பிரிந்து நின்று மோதிக்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தமிழரசுக்கட்சிக்குள் மோதல் ஏற்பட வேண்டும் என்றே பொது எதிரிகளும் தமிழ் ஆயுதக்குழுக்களும் விரும்புகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கும் ஆயுதக்குழுக்களைப் பொறுத்தவரை தமிழரசுக்கட்சி பலவீனமடைய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அதேபோன்று ஏனைய ஆயுதக்குழுக்களும் தமிழரசுக்கட்சி பிளவுபடுவதே தமக்கு இலாபம் என எண்ணுகின்றன. இதற்கு தமிழரசுக்கட்சியினர் பலியாகி விடாது அவதானமாக செயற்பட வேண்டும்.

கடந்த பொதுத்தேர்தலில் பட்டிப்பளை தமிழரசுக்கட்சி கிளையினர் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காது ரெலோ வேட்பாளருக்கே வாக்களித்;து வரலாற்று தவறை செய்தனர். இதனால் தமிழரசுக்கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படாமல் போனது. அது போன்ற சூழ்ச்சி வலைகளில் எதிர்காலத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.

தலைவர் வடக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டால் செயலாளர் கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும்.

கட்சியின் பொருளாளர் பதவியும் முக்கியமானதாகும். அப்பதவியும் கிழக்கை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும்.

தெரிவு செய்யப்பட இருக்கும் புதிய தலைமைக்கும் நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய பொறுப்புக்கள் உண்டு.

75வருட பழமை வாய்ந்த கட்சிக்கு சொந்தமாக நிரந்தர தலைமைக்காரியாலயம் இல்லை. இந்த குறைபாட்டை வரப்போகும் தலைமை நிவர்த்தி செய்ய வேண்டும்.

கனடாவை தவிர மேற்குலக நாடுகளில் தமிழரசுக்கட்சிக்கு கிளைகள் இல்லை. இந்த குறைபாட்டையும் நீக்கி அதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முன்வர வேண்டும். புதிய ஆண்டில் தமிழரசுக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க இருக்கும் தலைவர் முன் மிகப்பெரிய பொறுப்புக்கள் விரிந்திருக்கின்றன. அந்த பொறுப்புக்களை புதிதாக தெரிவு செய்யப்பட இருக்கும் தலைமை திறம்பட செய்யும் என்ற நம்பிக்கையோடு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post