வன்னி,மட்டு போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத பெயர் தவம் அண்ணா!

 

சிவஞானம் வைரமுத்து   (தவம் அண்ணா)

தோற்றம்   14/11/1953 -   மறைவு 10/12/2023

- தயாளன் 

 விடுதலைப் போராட்ட வரலாற்றில் வவுனியாவைக் குறிப்பிடும் போது முதன் முதலில் உச்சரிக்கும் பெயர் தவம் அண்ணராகத் தான் இருக்கும். தமிழ்த் தேசிய உணர்வுமிக்க இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொண்டராக ஆரம்பத்தில் இனம் காணப்பட்டார். அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் தா. சிவசிதம்பரத்துடன் தொடர்புபட்டவராக இருந்த இவர் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையாக இருந்தார். எனினும் விடுதலை உணர்வு மேலோங்கியிருந்ததால் குடும்பத்தின் கடமையை விட நாட்டுக்கான பணியே முதன்மையாக இருந்தது அவருக்கு. இவரின் போக்கை நன்கு புரிந்து கொண்ட துணைவியார் குடும்பப் பொறுப்பை முழுமையாக ஏற்கத் தயாராக இருந்தமையுடன் போராட்டப் பணிகளுக்காக எதிர்நோக்கவுள்ள சவால்களைச் சந்திக்கத் துணிவுடன் பயணித்தார்.

 1983 இன அழிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழலில் புதுக்குடியிருப்பு வழியாக வவுனியா செல்லும் நோக்கில் இரு ஜீப்புகளில் போராளிகள் பயணித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இவர்கள் சுதந்திரபுரத்துக்கு அப்பால் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வீதியிலேயே இரு ஜீப்புகளையும் விட்டு விட்டுச் செல்ல வேண்டியேற்பட்டது. இரவிரவாக நடந்து நெடுங்கேணி வரை சென்ற இவர்களை வவுனியா வரை இரவுப் பயணமாக நடையில் கூட்டிச் சென்றார் தவம் அண்ணா. இவர்கள் புறப்பட்ட பயணம் தடைப்பட்டதால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. வயலும் காடும் சூழ்ந்த பகுதிகளில் போராளிகளைத் தங்க வைத்த இவர் தனது வீட்டிலிருந்தே அனைவருக்குமான சாப்பாட்டை ஒழுங்கு பண்ணி மிகுந்த சிரமத்துக்கிடையில் அவர்களைப் பாதுகாத்தார்.

 மட்டக்களப்புக்குப் புறப்பட்ட போராளிகளை வவுனியாவரை  துவிச்சக்கரவண்டியில் கூட்டிச்சென்ற இவர் அங்கிருந்து பயணத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டார். இரு துவிச்சக்கரவண்டிகளில் பயணமாக வேண்டியவர்களும் வழியனுப்ப வந்த இவரும் இவரது உறவினரும் விவசாயிகள் போல உருமாற்றிக்கொண்டனர். ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினர் அலன் தம்பதிகளைக் கடத்தியதால் ஏற்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. வாகனங்களில் வந்த படையினரை எதிர்கொண்ட போதும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. அனந்தர் புளியங்குளம், சேமமடு போன்ற இடங்களைத் தாண்டி நேரிய குளத்தைச் சென்றடைந்து பின்னர் மதவாச்சிவரை பயணம் செய்ய முடிந்தது. மதவாச்சியில் இருந்து புறப்படும் பேருந்துகளில் பயணம் செய்தால் சோதனையை எதிர்கொள்ளத் தேவையில்லை என்பது எதிர்பார்ப்பு. வழிநெடுக இவரது உறவினர், நண்பர்களின் வீடுகளில் களைப்பாறிச் செல்ல முடிந்தது. எப்படியோ மட்டக்களப்புக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டதில்  தவம் அண்ணாவின் பங்கு காத்திரமானது.

 26.05.1984 அன்று இவரும் ரகுமான் என்ற போராளியும் படையினரின் திடீர் சோதனையில் சிக்கினர். சயனைட் அருந்த முற்பட்ட இவரை தடுக்கும் முயற்சியில் படையினர் ஈடுபடுகையில் ரகுமான் சயனைட் அருந்தி ஈகச் சாவடைந்தார். கைதாகிய இவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானார். 1986 காலகட்டத்திலேயே விடுதலையானார். அதன் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்னாலிருந்த பணிமனையிலேயே கடமையாற்றினார். இக்காலத்திலேயே தலைவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

 இந்திய இராணுவத்தினருடனான மோதல் தொடங்கிய காலத்தில் அவர்களின் முற்றுகையின்போது ஆரம்பத்தில் இவரும் தலைவருடன் இணைந்து நின்றார். பின்னர் வன்னிக்குச் சென்றபின் இந்திய படையினரால் கைதாகி பல சித்திரவதைகளை அனுபவித்தார். விடுதலையான பின்னர் மடுவில் தங்கியிருந்தார். அங்கிருந்து இந்தியா சென்றபோது அங்கும் கைதானார். ஒரு சமயம் படகில் கைதாகி பலாலியிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறாக நாலு தடவைக்குமேல் சிறையிலிருந்தபோதும் விடுதலையை நேசிக்கும் இவரது மனப்பாங்கு அப்படியே இருந்தது. சாத்தியமான வழிகளில் தனது பங்களிப்பை வழங்கினார்.

 புலம் பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த இவர் 10 டிசம்பர் 2023 ம் நாளன்று இயற்கையெய்தினார். வவுனியாவில் போராட்ட நடவடிக்கைகள் ஆரம்பித்ததில் இவரது பங்கு மகத்தானது. இவரது போராட்ட வாழ்விலும் இவர் சிறைப்பட்ட காலத்திலும் தனது குழந்தைகளை சிரமப்பட்டு வளர்த்தெடுத்த பாரியார் மற்றும் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் துயரில் நாமும் பங்கெடுக்கிறோம்.

எப்படியோ வவுனியா மற்றும் மட்டக்களப்பு போராட்ட வரலாறுகள் ஆவணமாக்கப்படும்போது இவரது பெயர் தவிர்க்க முடியாது.

  போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத பெயர் தவம் அண்ணா!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post