சி.வி.கே ஐ ஏற்பார்களா சிறீதரனும் சுமந்திரனும்?

தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் இதுவரை காலமும் தலைவர் தெரிவு என்பது ஏகமனதாகவே நடைபெற்றிருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி என்று ஆரம்பித்த பின்னர் இக் கட்சியிலேதான் போட்டியிடுவேன் என்றும் அதுவும் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பிலேயே தன்னை போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் கவிஞர் காசியானந்தன் அடம்பிடித்தார். மட்டக்களப்பில் கட்சியை வளர்த்த செ.இராஜதுரை அவர்களுக்கே உதயசூரியன் சின்னம் வழங்கியேயாக வேண்டிய நிலை உருவானதால் தமிழரசுக் கட்சியின்சின்னத்தில் காசியைப் போட்டியிட அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கட்சி அரசியல் தடம்புரண்ட வரலாறு அங்கேதான் ஆரம்பித்தது. மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அறிவிக்கப்பட்டதே தலா ஒரு தமிழரும், முஸ்லிமும் தெரிவாக வேண்டும் என்பதற்காகத்தான்.

 1977 பொதுத்தேர்தலை தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பாக கூட்டணி அறிவித்ததால் ஒரு முஸ்லிமை தமிழரசுக்கட்சியின் சார்பில் நிறுத்தி அவர் பெறும் வாக்குகளையும் தமிழீழக் கோரிக்கைக்கான வாக்குகளே என அறிவித்திருக்கலாம். ஆனால் தமிழர் தலைமை தவறிவிட்டது. குறிப்பாக முஸ்லிம்கள் தமிழரைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை உருவானது. பொத்துவில் தொகுதியில் (அதுவும்  இரட்டை அங்கத்தவர்தான்) போட்டியிட வருமாறும்  தேவையான வளங்களை தான் வழங்குவதாகவும் அங்கிருந்த பிரபல தனவந்தர் கனகரத்தினம் காசிக்குத் தெரிவித்திருந்தார். ஏன் யாழ்ப்பாணத்து தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று சொல்லியிருந்தால்  ஏனைய வேட்பாளர்களைவிட அதிகம் வாக்கு வித்தியாசத்தில் காசி வென்றிருப்பார்.

 இத் தேர்தலின் பின் உறங்கு நிலைக்குப்  போயிருந்த தமிழரசுக்கட்சியானது 2004ல் தூசி தட்டி எழுப்பப்பட்டது. அப்போதும் கிளிநொச்சி தான் தடம்புரண்டது. கூடடணியின் தலைவர் ஆனந்த சங்கரி புலிகளுடன் முரண்பட்டதால் அன்றைய நிலையில் தமிழரசை களத்துக்கு கொண்டு வரவேண்டியேற்பட்டது. காங்கிரஸ், ரெலோ, .பி.ஆர்.எல்.எப் என இருந்தாலும் இதில் எந்தக் கடசியின் சின்னத்திலும் கூட்டமைப்பு வேட்பாளர்களைக் களமிறக்க விரும்பவில்லை தலைவர். 1980 களில் இணைந்த ஒரு போராளியின் குடும்ப பின்னணியைக் கேட்டபின் "நானும் இவ்வளவு காலமும் பார்க்கிறேன் தமிழரசுக்கட்சியில் இருந்துதான் போராட்டத்துக்கு வருகிறார்களே அன்றி ஒரு காங்கிரஸ்  காரனையும் சந்திக்கவில்லை" என்று குறிப்பிட்டார். கூட்டணியை உருவாக்கப் பாடுபட்டவர்களில் ஒருவரான இவரது பெரியப்பா வெற்றிவேலுவும் பழுத்த தமிழரசுக் கட்சிக்காரர்தான்.

இவ்வளவு பாரம்பரியமிக்க கட்சியில் தலைமைப் பதவிக்குத் தேர்தல் என்பது தமிழ் உணர்வாளர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. களத்தில் குதிக்கிறோம் என்று இறங்கியுள்ள இரு வேட்பாளர்களும்   திரு.சி. வி.கே .அவர்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பதாக கூறுகிறார்கள். அவரோ பாராளுமன்றத்துக்கோ,மாகாணசபைக்கோ ஏன் கட்சித் தலைமைக்கோ போட்டி இடமாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். ஏகமனதாக கட்சியினர் தீர்மானித்தால் கட்சியை வழிநடத்திச் செல்வேன் என்கிறார். அதற்கான தகுதியும் அவருக்கு உண்டு. மேலும் பண்டிதர், திலீபன் தொடக்கம் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தவர். 

இந்திய இராணுவ காலத்திலேயே திலீபனின் நினைவுத் தூபியை நிர்மாணித்தவர்.

இந்நிலையில் இருபோட்டியாளர்களும் திரு சி.வி.கே சிவஞானம் அவர்களேயே கட்சித்தலைமையை பொறுப்பேற்று நடத்துங்கள் என்று கேட்டால்  என்ன? மாவை கடசித்தலைவர் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று தெரிவித்த சூழ்நிலையில்தான் இந்த இருவரும் போட்டியிடத் தீர்மானித்தனர். இந் நிலையில் சி.வி .கே அவர்களை தலைவராக நியமிப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா என இருவரையும் சம்பந்தன் ஐயா கேட்கலாம். ஏற்கவில்லை என எந்த ஒரு   வேட்பாளராவது சொன்னால் தேர்தலை நடத்தலாம். தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற நிலையில் கணிசமானோர் உள்ளனர். தேர்தல் நடத்தித்தான் ஆகவேண்டும் என்று கூறும் வேட்பாளர் தொடர்பாக இந்த நடுநிலையாளர்கள் தீர்மானிப்பதற்கு வசதியாக இருக்கும்.

கடந்த பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கட்சித்தலைவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் கட்சியினர் கூடி முடிவெடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். தேசியப்பட்டியல் உறுப்பினராக மாவையை தெரிவு செய்வதென்றும் இவர் பதவியேற்கும் நாளிலேயே " அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருப்பதால் அங்குள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாவட்டத்தில் உள்ள ஒருவரே தேவை என்பதாலும் நான் என் பதவியை ராஜிநமா செய்து அம்பாறை மாவட்டத்தவர்க்கு வழி விடுகிறேன்" என்று உரையாற்றி விட்டு வெளியேறியிருக்கலாம்.

      இலங்கைக்கு இது புதிய விடயமல்ல. பிரதம நீதியரசராக மீண்டும் ஹிராணிபண்டாரநாயக்கா நியமனம் பெற்று காலையில் பதவியேற்று மாலையில் ராஜினாமா செய்திருக்கிறார். இந்த வகையில் மாவையும் காலையில் பதவியேற்று அம்பாறை மாவட்டப்பிரதிநிதியாக நியமனம் வழங்க இருப்பவரையும் அறிமுகம் செய்து வைத்திருக்கலாம். சிரேஷ்ட அரசியல்வாதி என்ற வகையில் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவமாக வழியனுப்பியிருப்பார்கள். எல்லாவற்றிற்கும் முதலில் கூடிப்பேச வேண்டும். இந்த முடிவை ஏற்பதாக மாவையும் சொல்ல வேண்டும். “அரசியலில இதெல்லாம் சகஜம்ப்பாஎன்ற மாதிரி தொடர்ந்து பதவியிலிருக்க குறுக்குவழியை நாடாது இருக்க வேண்டும். அவசரப்பட்டு ஏதேதோ எல்லாம் குழறுபடிகள் நடந்து செயலாளரும் பதவி விலக வேண்டி வந்தது. செல்வாவின் கட்சியினை பொன்னம்பலம் பாணியில் நடத்த முயன்றதன் விளைவு இது.எப்படியோ சி.வி.கே அண்ணர் விடயமாக சரியான முடிவை இரு வேட்பாளர்களும் ஆலோசிப்பார்களா?

சுடரவன்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post