தண்டனையையே பாராட்டாகப் பெற்ற மாணவன் புதுவை!


தண்டனையையே பாராட்டாகப்   பெற்ற மாணவன் புதுவை!

- காக்கா அண்ணா

எல்லோருக்கும் பாடசாலை நாட்கள் என்றும் மறக்கமுடியாதவை. அதிலும் நாம் செய்த குறும்புகள் / குழப்படிகள் காரணமாகப் பெற்ற தண்டனைகள் என்றும் நினைவில் இருக்கும். அதைப் போன்று மற்றவர்களைவிட  வித்தியாசமானவராக, தனித்தன்மை சிறப்புடன் செயல்பட்டமைக்காகப் பெற்ற பாராட்டுகளும் மறக்கமுடியாதவை. ஆனால், ஒரு தண்டனையையே பாராட்டாகப் பெற்ற ஒருவர் இருந்தாரெனில் அவர் நாமறிந்த வகையில் புதுவை அண்ணாதான்.

பாடசாலை நிர்வாகம் பற்றி கிண்டலுடன் நாலு வரி கவிதையை கரும்பலகையில் எழுதிவிட்டார் புதுவை அண்ணா. (இதனை அவர் எமக்கு சொல்லிக்காட்டியிருக்கிறார்) அதிபர் வந்தார். “இரத்தினதுரை இஞ்சை வா...” - உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து அவரருகே சென்றதும் பிரம்பினால் கையில் தண்டனை வழங்கினார் அதிபர். தொடர்ந்து கரும்பலகையில் இருந்த கவிதைப் பக்கம் பார்வையைச் செலுத்திய பின், “உன்னைத் தவிர வேற ஆராலயும் இப்பிடி எழுதமுடியாது, என்று சொல்லிவிட்டு சென்றார் அதிபர். அதாவது, இதற்கெல்லாம் விசாரணையே தேவையில்லை. உன்னை - உன் ஆற்றலை நான் அறிவேன் என்ற மாதிரி அவரின் தீர்ப்பு இருந்தது.

அதிபரின் நடவடிக்கை தண்டனை என்றாலும் புதுவை அண்ணாவை அவர் சரியாகவே கணித்திருக்கிறார். வழங்கப்பட்டது தண்டனை என்றாலும் பாராட்டாகவே நான் கருதுகிறேன். நீங்கள்...?

***

இயக்கத்தில் நடைபெறும் திருமணங்கள் ஆரம்பத்தில் இலச்சினையுடன் உள்ள கடிதத் தலைப்புகளிலேயே பதிவு செய்யப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இன்னார் இன்னாரைத் திருமணம் செய்து கொள்கிறார் என்று வெறும் வசனமாகத்தான் இவை இருந்தன. முடிவில் பதிவாளர் மணமகன், மணமகள் பெயர் குறிப்பிட்டு வெளிவரும். இதனை போராட்ட இலட்சியத்துக்கு வலுச்சேர்க்கும் வித்தில் கேட்பதற்கு உணர்வுபூர்வமாக மாற்றி வடிவமைத்தவர் புதுவை அண்ணாதான்.

மாவீரர்களுக்கெனத் தனிச் சுடலை என்று ஆரம்பித்தபோது முதலில் ஒருவரின் வித்துடலை தீ மூட்டி எரித்ததை காணொலியில் கண்ணுற்ற தலைவர் நாங்கள் இனி புதைப்போம் என முடிவெடுத்தார். அந்த முடிவை அடியொற்றி “மாவீரர் துயிலும் இல்லம் எனப் பெயரிட வேண்டும் என்று அப்போதைய யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ராஜனிடமும் தேசியத் தலைவரிடமும் குறிப்பிட்டவர்இவர்தான். கார்த்திகை விளக்கேற்றல் பாணியில் தீபமேற்ற வேண்டும் என்ற முன்மொழிவை வைத்தவரும் இவரே.

மாவீரர் நாள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாவீரரின் பெற்றோரும் போராளிகளுமாக இணைந்து பாடக்கூடிய விதத்தில் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று அப்போதைய மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்மொழிந்தபோது தலைவர் இவரை நோக்கினார். கையைப் பொத்திக் கட்டை விரலை உயர்த்தி சம்மதம்  தெரிவித்தார் இவர். இன்றும் தமிழ் மக்களின் உணர்வுகளோடு ஒன்றித்துவிட்ட இப்பாடல் கேட்கும் ஒவ்வொரு தடவையும் கண்ணீரை வரவழைக்கும். முதலில் 1992 மாவீரர் நாள் பிறக்கும் வேளையில் கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலிபரப்பப்பட்ட அதேசமயம் இதனைப் பாடியவரான வர்ணராமேஸ்வரன் மேடையில் நின்றும் இதனைப் பாடினார். அந்த உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளில்லை.  அடுத்தநாள் அப்பாடலின் ஒலிப்பேழையை என்னிடம் தந்து இப்பாடலைக் கேட்கும்போது ஒவ்வொரு வரிக்கும் (விடயத்துக்கும்) உங்கள் மனதில் தோன்றியதை அப்படியே எழுதுங்கள் என்று என்னிடம் சொன்னார். அந்தக் கட்டுரை வெளிச்சம் இதழில் வெளியானது. போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட பல கட்டுரைகள் வெளிச்சத்தில் வெளியாகின. அதாவது வரலாற்றைப் பதிவு செய்வதில் அதீத அக்கறை காட்டினார்.

கிட்டுவின் வீரச்சாவு பற்றிய செய்தி கிடைத்ததும் பாடகர் சிட்டுவை வரவழைத்தார்.

தளராத துணிவோடு களமாடினாய்..”, என்று தொடங்கும் முதல் நான்கு வரிகளை எழுதிவிட்டு, சிட்டுவைப் பாடச்சொன்னார். சிட்டு பாடியதும் அந்தக் கணத்தில் ஏற்பட்ட உணர்வுகளில்  அடுத்த நாலு வரிகள்  - சிட்டு பாடுதல் என அந்த நிகழ்வு தொடர்ந்தது.

இதன் பின்னரே இசையமைக்கப் பாடலைக் கொடுத்தார். உலகில் வேறெங்காவது இவ்வாறான உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நிகழந்திருக்குமா என்பது சந்தேகமே!

ஈழநாதத்தின் ஆண்டுவிழாக்கள், எனது மகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் முதல் சகல நிகழ்வுகளிலும் இவரது பங்கேற்பு இருந்தது. எல்லாத் திட்டமிடல்களிலும் இவரது ஆலோசனை - வழிகாட்டுதல் இருந்தன. எந்த சுப நிகழ்வுகளையும் கலகலப்பாக மாற்றும் வித்தகர் இவர்.

எங்களது வாழ்நாளில் இவரது பங்கு ஒரு கட்டுரைக்குள் அடக்க முடியாதது. மகளின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் இவர் சொன்ன விடயம் இன்றுசொன்னது போல இருக்கிறது. “அருணாவின் கால்கள் ஆடியதை விட இந்த நிகழ்வுக்காக காக்கா அண்ணை ஓடினதுகூட...”,

***

நாங்கள் மரணிக்கும் வரை இவரது நினைவுகள் எமது நெஞ்சில்நிலைக்கும்.

தற்காலத்தில், சிறீ லங்கா வான்படை யாழ். நகரில் கண்காட்சியினை நடத்துகிறது. இது சம்பந்தமாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அருமையான நினைவூட்டல் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். யுத்த காலத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு கவிஞர் இன்னொரு கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டு (தனது ஊரின் பெயரையும் சுருக்கமாக இணைத்திருப்பவர்) “இவர் ஆரண்ணை?” என்று கேட்டார்.

இக்கேள்விக்கு புதுவையண்ணாவின் பதில் இவ்வாறிருந்தது.

இந்தச் சிறீ லங்கா வான் படை இருக்குதே அது பல இடங்களிலயும் குண்டுபோட்டுது;அதால கன சனம் செத்துப்போட்டுது;அது சில சமயம் பீக் குண்டு போட்டுது;பிறகு நல்லூருக்கு பூக்கொண்டந்துபோட்டுது ;அதைப் பாக்கொண்டு பாடினவன்தான் இவன்



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post