உண்மையை உணர்ந்து செயல்படுவோம் !

ஒரு குடும்பத் தலைவன் தனது உறவுகளையும், உடைமைகளையும் பாதுகாக்க ஒரு வீட்டையே முதலில்அமைத்துக்கொள்வான்.ஏனெனில் உறவுகளினதும் ,உடைமைகளினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதமானது வீடேயாகும். பாதுகாப்புக்காக ஒரு இடமில்லாமல் சொந்தங்களையும் சொத்துக்களையும் தேடுவது அர்த்தமற்ற விடயம் என்பதேஉண்மை!

இது போன்றே ஒரு இனம் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் அபிவிருத்தியையும்,சலுகைகளையும்நோக்கி பயனிப்பது கண்ணைவிற்று சித்திரம் வாங்குவது போன்றதே!இதற்கு அண்மைக்கால சான்றுகள் பல உள்ளது. காலத்திற்கு காலம் சிங்கள அரசுடன் இணைந்து அபிவிருத்தியையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வது நமது சகோதர இனமாகும்.

2014 ஆனித்திங்கள் 15அன்று பொதுபலசேனா எனும் சிங்கள அமைப்பு அளுத்கம,பேருவளை,தர்க்கா நகர் ஆகிய இடங்களில் உள்ள முஸ்லீங்களின் வீடுகள் மற்றும் பள்ளி வாசல்கள் மீது கல் வீச்சு தாக்குதல்களை நடாத்தினர்.இது மட்டுமின்றி பேரூந்துகளில் பயணித்த முஸ்லீங்கள் இறக்கப்பட்டு நடுவீதியில் வைத்து தாக்கப்பட்டனர்.

இதனால் முஸ்லீம் மக்கள் மேற்படிநகரங்களில் வீடுகளில் இருந்து வெளியேறி அகதிகளாக முகாங்களில் தஞ்சமடைந்தனர்.முஸ்லீம் மக்களின் துன்பத்தை இலங்கை காவல்துறை கண்டும்காணாத து போல் இருந்தது. அளுத்கம வெல்லம்பிட்டிய பள்ளிவாசலுக்கு காவலுக்கு  நின்ற மூன்று முஸ்லீம் இளைஞர்கள் 2014ஆனித்திங்கள் 16ம் நாள் அதிகாலையில் வாகனத்தில் வந்த சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இரண்டு நாட்களில் மட்டும் 80பேர்வரை காயமடைந்தனர். சலுகைகளும்,அபிவிருத்தியும் சிறுபான்மை சமூகத்திற்கு நிரந்திரமானதன்று என்பதை இச்சம்பவம் கோடிட்டு   காட்டிற்று!

 " திருகோணமலை ஆக்கிரமிப்பின் கீழ் இலங்கையின் தமிழர் தாயகத்தை இலக்கு வைக்கும் நிலஅபகரிப்பு"   என்ற ஓக்லன்ட் கலிபோர்னியா நிலையத்தின் ஆய்வறிக்கை ,தமிழர்பிரதேச நிலபகரிப்பு தொடர்பாகபல விடயங்களை முன்வைத்துள்ளது.

2009ம் ஆண்டுக்கு பின் திருகோணமலையில் தமிழ்,முஸ்லீம்வாழும் ஆறு பிரதேச செயலக பிரிவுகளில் இடம் பெற்று வரும்நில அபகரிப்பு காரணமாக மாவட்டத்தின் 27 %ஆக இருக்கும் சிங்கள மக்கள் கையில் 36% நிலப்பரப்புகள் உள்ளது.அபிவிருத்தி மற்றும் பேணுகை ஆகியதிட்டங்களின் கீழ் 50%க்கு அதிகமான நிலங்கள் குச்சவெளி பிரதேசபிரிவில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.இங்கு 26 விகாரைகள் 3337 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. வளம் நிறைந்த விவசாய நிலங்கள் மற்றும்கடற்கரை பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு உள்ளதால் தமிழ்முஸ்லீம் மக்கள் வாழ்வாதரங்களைஇழந்து உள்ளனர். இப் பிரதேசத்தின்உச்ச இராணுவ பிரசன்னம் பெரும்அச்சுறுத்தலை விடுக்கிறது. 2011 இல் கிழக்கு மாகாண அமைச்சினால் மேச்சல் தரையாக பிரகரணப்படுத்தப்பட்ட மைலத்தமடு மாதவனை பிரதேசத்தின் 5000 ஏக்கர் நிலத்தில், வெளிமாவட்டத்தைச்சேர்ந்த பெரும்பான்மைச் சமூகத்தினர் 100க்கு மேற்பட்ட ஏக்கர்  மேச்சல் தரையை அழித்து சிறுபோகபயிர்செய்கையை மேற்கொண்டுள்ளனர்.

வெளிமாவட்ட ஆக்கிரமிப்பாளர்களால் 2இலட்சத்திற்கு மேற்பட்ட மாடுகளினதும் 1000க்கும் மேற்பட்டகுடும்பங்களினதும் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.இது விடயமாக நீதிமன்றம் பலதீர்ப்புகளையும் தடைகளையும் வழங்கியபோதும் இவையாவும் சிங்களதேசத்தில் தமிழர்களுக்குவலுவிழந்து போயிற்று. 2023ஆம்ஆண்டில் இப்பிரதேசத்தில் இரு பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டபோதும் அவர்கள்

அத்துமீறுவோருக்கே பக்கத்துணையாக உள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. மாடு வளர்ப்பும் பால்உற்பத்தியும் நாட்டின் அபிவிருத்திக்குள் உட்படாத விடயங்களா என்பதை சிங்கள தேசத்திற்கு சாமரம்வீசும்அரசியல் வாதிகளும் அவர்களின்விசுவாசிகளுமே தெளிவு படுத்த  வேண்டும்.

மேற் குறிப்பிட்டது போன்று பல விடயங்களை ஒன்றன்பின் ஒன்றாகஅடுக்கிக்கொண்டே போகலாம்.எனவே இன்னும் தமது சொந்த நலனுக்காக சிங்கள தேசத்திற்கு விலை  போகும் அரசியல்வாதிகளையும் அவர்களின் சகாக்களையும் மக்கள் இனம் கண்டுஓரம்கட்டவேண்டிய தருணம் இது.

காலத்திற்கு காலம் தமிழ் தேசியஅங்கியை அணிந்து கொண்டு தமிழரசுக் கட்சிக்குள் வந்த நபர்களால் தமிழ்மக்களும், தமிழரசுக்கட்சியும் தற்போது சிதைந்து போயுள்ளது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நிதி வளம் அற்று இருப்பது உண்மைதான் இதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களினதும்,சாராய விற்பனை நிலையங்களினதும் அனுமதியை பெற்று அந்த அனுமதிகளை மற்றொருவருக்கு விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளை மீள்பரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறான இவர்களின் செயற்பாடுகள் கட்சிக்குள் உள்ளதமிழ்தேசிய விரோதிகளுக்கு நல்ல தீனி போடுவதாக அமைந்துவிடும்

 தமிழ் தேசத்திற்கும்,தமிழ் தேசியத்துக்குமாக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை அளிக்கவேண்டும்.

இதன் மூலம் இலங்கையில் இருவேறுபட்ட இனங்கள் வாழ்கின்றனர்அவர்கள் இருவரும் ஒருமித்த பாதையில் பயனிக்க முடியாதவர்கள் என்ற செய்தியை மீண்டும் வலியுறுத்தும்வேளை இதுவாகும். சர்வதேச நாடுகளிடமிருந்தும் உலகவங்கியிடமிருந்தும் கடன்களைப் பெற்று வானுயர் கட்டிடங்களையும் காப்பெட் வீதிகளையும் அமைப்பதால் நாடு அபிவிருத்தி அடைந்துவிடும் எனஅரசியல்வாதிகள் எண்ணுவது மிகத் தவறான மனப்பாங்காகும்.

ஒரு காலத்தில் பொருளாதாரத்தில் இலங்கையைப்பார்க்கிலும் பின்னடைந்து காணப்பட்ட பல் இன சமூகங்களைக்கொண்ட சிங்கப்பூர் இன்று வளர்ச்சியடைந்து காணப்படுவதன் காரணத்தை யாவரும் உன்னிப்பாக உற்று நோக்கவேண்டும்.

இரு மொழிகளை பேசும் சமூகத்தைக்கொண்ட இலங்கை எப்போது இனமுரண்பாட்டுக்கான சரியான தீர்வை முன்வைக்கிறதோ அப்போதே இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாகமாறும்என்பதை தெரிந்தும் தெரியாது போன்று இருக்கும் சிங்களவாதிகளையும்  போலித் தமிழ்தேசிய வாதிகளையும் நாட்டு மக்கள் இனம் கண்டு அவர்களைஅகற்றும்போதே இலங்கை உண்மையில் அபிவிருத்தியடையும்!

ரஞ்சன்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post