பிரிந்தாலும் ஒன்றுபடும் ஜேவிபி! சிதறு தேங்காய் ஆகிய தமிழ் அரசு !!

 

-நோக்கன் கட்சி எக்கேடு கெட்டாலுமென்ன தாங்கள் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் வேட்பாளர் தெரிவில் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர் சுமந்திரனும் சாணக்கியனும்.

தமிழரசைப் பொறுத்தவரை நிலையான வாக்கு வங்கியைக் கொண்டிருந்தவர் சிறீதரன். இவரை வீழ்த்த அறிவிக்கப்பட்ட, பின்னர் நடைபெறாத உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டன.

இவர்கள் தமது வழிகாட்டி சுமந்திரனே என பரப்புரைகளின் போது குறிப்பிட்டனர்.

இத் தேர்தலில் சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியினருடன் இணைந்து ஆட்சி அமைப்பதே நோக்கம். (இப்போது சந்திரகுமாரின் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் திணைக்களம் ரத்து செய்துவிட்டது)

கட்சியில் இருப்பவர்களே கட்சினால் உத்தியோபூர்வமாக  களமிறக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற விடயம் கட்சிக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அரை தசாப்த காலமாக பதில் செயலாளராக   விளங்கும் .சத்தியலிங்கம் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. கட்சிக்குள் தனக்கு வேண்டிய அணியினரின் செயற்பாடுகள் தொடர்பாக பதில் அளிப்பவர் அல்ல இவர். மாறாக தனக்கு வேண்டாத அணியினரிடம் பதில் கேட்கும் செயலாளரே இவர். 

இலங்கையில் நீண்ட காலம் பதில் செயலாளராக இருந்தவர் யார் என அரசியல் மாணவர்களிடம் கேட்டால் இவரது பெயரையே சொல்ல வேண்டும். 

ஏன் திருமதி ரவிராஜை வேட்பாளராக தெரிவு செய்யவில்லை என்று கேட்டால் நழுவலான பதில் அளிபார்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தோற்கும் சிங்கள வேட்பாளருக்கே ஆதரவளிக்கும் (மைத்திரி விதிவிலக்கு)  பாரம்பரியத்திற்கு, மாறாக பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு அளித்தீர் என அர்த்தம் தரும் வகையில் விளக்கம் கேட்டு சிறீதரனுக்குக்  கடிதம் அனுப்பிய பின்பே வேட்பாளர் நியமனத்திற்கு சத்தியலிங்கம் ஒத்துக் கொண்டார்.

சிறீதரன் தோற்றாலும் வென்றாலும் அவரது வாக்கு தேசியப் பட்டியலுக்குத் தேவை என்பதே சத்தியலிங்கத்தினதும் சுமந்திரனதும் நிலைப்பாடு. 



நல்லூர் கோவிலை இடித்துவிட்டு  நூறு மல சல கூடங்களை அமைக்க வேண்டும் எனத் துடியாய்த் துடிக்கும் அருண் சித்தார்த்துடனும்,புலிகளுடன்  பேச்சு வார்த்தையில் ஈடுபட்டமைக்காக சந்திரிகாவின்  அரசில் இருந்து விலகிய,   அனுர குமார திசநாயக்காவுடனும், புகைப்படம்  எடுத்து புளகாங்கிதம் அடையும் சுரேகாவுக்குத்  தமிழ்த் தேசியத்தின் பெயரால்  வேட்பாளர் பட்டியலில் இடம்.   சசிகலாவிற்குப் புறக்கணிப்பு

ஏற்கெனவே  வேட்பாளர் பட்டியலில் இடம் கோரிய பெண்கள் நால்வருக்கும்  இடம் இல்லை.  இந்த லட்சணத்தில் காடுகளிலும், மலைகளிலும் தான் பெண்வேட்பாளர்களைத் தேடியதாக அறிவித்தார் சுமந்திரன். (இடைக்காடு, கட்டைக்காடு, கீரிமலை, சுதுமலை, எனத் திரிந்தாரோ தெரியவில்லை) 



இறுதியில் இருவரைக் கண்டுபிடித்தாராம். இதுவரை தமிழ்த் தேசிய அரசியலில் காணத புதுமுகங்கள் இவர்கள்.

சசிகலாவைத் தெரிவு செய்தால் அவருக்கு விழும் வாக்குகளில் மேலதிகமாக இருவருக்கு வாக்களிப்போரின் தெரிவில்  சுமந்திரன் இடம் பெற மாட்டார் என்பது நிச்சயம்.

மூன்றாவது முறையாக ஆர்னோல்டின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற  முடியுமென்றால் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரனையைக்  கொண்டு வருவதற்காக சுமந்திரனின் சார்பில் செயல்பட்டமையைத் தவிர வேறு ஏதும் காரணம் இருக்க முடியாது.

ஆர்னோல்ட் கடந்த இரு தேர்தல்களிலும் தனக்கு வாக்களிப்போர் சுமந்திரனுக்கும் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தற்போது சுரேகா சுமந்திரனுக்கும் சயந்தனுக்கும்  நன்றி தெரிவிக்கின்றார். இருவருக்கு வாக்களிக்க முனைவோர் இவர்கள் இருவரையும் கண்டு கொள்ளவேண்டும்.  அதனை விருப்பு வாக்காக்க வேண்டும் என்பதே சுரேக்கா குறிப்பால் உணர்த்தும் அந்த செய்தி ஆகும்.

சிறீதரனைத் தவிர ஏனையோர் தனக்கு  விருப்பு வாக்களிக்க சொல்லும் வகையில் வேட்பாளர் தெரிவை நடத்தி முடித்துள்ளார் சுமந்திரன்.

***

இத்தேர்தலில் சந்திரகுமாரின் வாக்கு வங்கி அப்படியே உள்ளது .சஜீத்தின் ஆதரவாளர்களும் அவருக்கு ஒரு வாக்களிப்பர். எனவே அவரது தெரிவு நிச்சயம் .

டக்ளஸ் 2004 இல் ஜனநாயகப் பேரலையிலேயே தனது இடத்தைத் தக்கவைத்து கொண்டவர்.

தமிழ் அரசின் கோளாறுகளால்  வேறு வழியின்றி  காங்கிரசுக்கு வாக்களிப்போரால் கஜேந்திரகுமார தெரிவாவதும் நிச்சயம்.

ஆக சந்திரகுமார், கஜேந்திர குமார் , டக்ளஸ் போக மீதி மூன்று இடங்கள் உள்ளன.  இவற்றில் ஆகக் கூடிய வாக்குக்குகளைப் பெறும் அணியினருக்கு போனஸ் ஒன்று போனால் மீதி இரண்டு இடங்கள் தான்.

சிதறிப் போன வீடு, சங்கு, தமிழர் விடுதலை கூட்டணி, காலஞ்சென்ற  ஜனநாயக தமிழரசு கட்சியை உயிர்ப்பித்த KT. தவராஜா அணி (இந்த கட்சியை ஆரம்பித்த மன்னார் சிவகரன் கடந்த  உள்ளுராட்சி தேர்தலின் விழுந்த அடியின்  பின்பு தான் பொது அமைப்புக்களின்  பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு எல்லா கட்சிகளையும் சாடுகின்றார் சீ.சீ ......  இந்தப் பழம் புளிக்கும்  என்ற  நரியின்  நிலைதான் அவருடையது)

(இதில் கட்சியென்ற சொல்லுக்குப் பதிலாக தற்போது கூட்டமைப்பு என்ற சொல்லைப் புகுத்தியுள்ளனர்)

அனுராஅணி, பரபரப்பாக எதையாவது சொல்லாவிட்டால்,  அல்லது செய்யாவிட்டால் தலை வெடித்து செத்துவிடும் சாபம்  பெற்றவர் போன்ற  வைத்தியர் அருச்சுனா தலமையிலான அணி,

மற்றும் காலம் காலமாக மார்க்சிசம் பேசும் அணி,  எனப் பல்வேறு அணிகளுக்கும் மிஞ்சி இருப்பது இந்த இரண்டே இரண்டு ஆசனங்கள் மட்டுமே ஆகும்.

சிறீதரனை தவிர ஏனைய வேட்பாளர்கள்  தமது விருப்புத்  தெரிவுக்குத்   தம்மைப்   குறிப்பிட்ட போதும்  வெற்றி பெறாவிட்டால் இருக்கவே இருக்கின்றது தேசிய பட்டியல்  என எண்ணுகிறார் சுமந்திரன்.

இதுவரை செய்த கோளாறுகளால் சந்தியலிங்கமும் வன்னியில் வெற்றிபெறப் போவதில்லை என்பதால் 

தேசியப்பட்டியல் விவகாரம்தான் இருவருக்கும் இடையே மோதலைஉருவாக்கலாம்  .

மட்டக்களப்பை பெறுத்தவரை தமிழ்ப்  பொது வேட்பாளரை ஆதரித்த வைத்தியர் ஶ்ரீநாத், சிறீநேசன்  ஆகியோருக்கு விழும் வாக்குகளைத் தவிர  ஏனையோருக்கு விழும் விருப்பு வாக்குகளில் சாணக்கியன்  இடம் பெறுவார். அதற்கெற்ற வகையிலேயே வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது. என்னை வெற்றி பெறச்செய்தால் உங்களுக்கு எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இடம் நிச்சயம் என சாணக்கியன் வாக்குறுதி அளித்ததாக பரவலான கதைகள் அடிபடுகின்றன

வன்னியைப் பொறுத்தவரை ரவிஹரன் மக்கள் போராட்டங்களில் முன்நின்றவர் என்ற வகையில் தெரிவாகலாம் ஆனால் தனது பெயரை திணிக்கும் அளவுக்கு சத்தியலிங்கத்திற்கு வலிமை போதாது. 

 திருமலையில்  தமிழ் பிரதிநித்துவம் காப்பாற்றபட்டாலே போதும் என்ற நிலை  அம்பாறையிலும் அப்படியே .

2004 தேர்தலில் டக்ளஸ் எப்படியோ  தன்னை தக்கவைத்துக்  கொண்டார். அதே போன்ற நிலையில்  தற்போது சிறீதரன் உள்ளார். 

கட்சியில் இவருக்கு விருப்பு வாக்களிக்க மக்களை வேண்டும் நிலையில் ஏனைய வேட்பாளர்கள் இல்லை என்ற கசப்பான உண்மையை சிறீதரனும் அவரது தீவிர விசுவாசிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் ஆளுமை இல்லாத மாவையே தமிழ் தேசியத்திற்கு தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த நெருக்கடிகளுக்கு காரணம் ஆவார்.

தலைமை வடக்கில் இருந்தால் செயலர் கிழக்கில் இருந்து தெரிவாக வேண்டும் என்று பலரும் படித்துத் படித்துச்  சொன்னதை கேட்காமல் வருடக் கணக்கில் கோமாளியாக இருந்து  மோசமான தலைமைக்கு உதாரணமாகிவிட்டார்

தெற்கில் `அறகலய` போராட்டதின் அறுவடையின் பயனை ரணிலும், ஜேவிபியும் பெற்றனர். வடக்கு கிழக்கின் பொதுக் கட்டமைப்பின் விளைவையும்,சங்கு சின்னத்தையும் நோகாமல்  நுங்கெடுத்த எடுத்த தரப்பினர் கொண்டு போய் விட்டனர்.

இறுதிப் போரில் தமிழர்களின் தோல்வியை வெடி கொழுத்தி மகிழ்ந்த வெவ்வேறு இரு தரப்பினர்களும் இவர்களில் அடக்கம். இப் பொதுத் தேர்தலில் ஜேவிபி பெரும்பான்மை பெறுவதை உறுதி செய்வதற்காக போட்டியில் இருந்து விலகுவதாக விமல் வீரவன்ச என்ற இனவாதி குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தமிழ் தேசியத்தின் பெயரால் சிதறு தேங்காயின் நிலையில் தமிழர் நிற்கின்றோம்.

மகிந்தாவோ, மைத்திரியோ, கோத்தபாயா, ரணிலோ, அனுர குமரவோ தங்களுக்குள் என்னதான் பிடுங்குப் பட்டாலும் இறுதிப் போர் தொடர்பான விசயங்களில் ஒத்த கருத்துடனேயே உள்ளனர் ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர்களான நாங்களோ … ??

 

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post