ஊடுருவி
எந்தவோர்
இனத்தவரோ, மதத்தவரோ வழிபடும் இடத்தை இடித்தழிப்பதோ, இடம் மாற்றியமைப்பதோ பொதுவாக
சம்பந்தப்பட்டவர்களுக்கு
நெருடலான விடயம்தான். ஆழமான காயத்தை உண்டு பண்ணும்தான். அதேபோல, ஆக்கிரமிப்பின் சின்னமாக ஒரு வணக்கத்தலத்தை அமைத்துவிட்டு அதற்காக பலம் குறைந்தவர்கள் தமது பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தேயாக வேண்டும் என சண்டித்தனத்துடன் நிற்பதையும் ஏற்றுக்கொள்ளலென்பது சிரமமே. ஆனால்,
தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக இந்துக்களைப் பொறுத்தவரை தையிட்டி விவகாரம்தான் முதலாவதோ, இறுதியானதோ என்று கொள்ளமுடியாது.
தையிட்டி விவகாரத்தைப் பொறுத்தவரை இது இராணுவத்தினருக்கான நிதியிலிருந்து கட்டியெழுப்பப்பட்டது. அதேவேளை,
இதே மாவட்டத்தில், இதே தொகுதியில் இதே
பிரதேச செயலர் பிரிவில், இதே பிரதேச சபைக்கு
உட்பட்ட இடத்தில் கீரிமலை ஆதிசிவன் கோயில், பெண் சித்தரான சடையம்மாவின் சமாதி கோயில், சங்கர சுப்பையர் மடம், கதிரவேலன் கோயில் என்பவற்றை இராணுவமே முற்றாக அழித்தொழித்தது. வரலாற்று
ஆதாரங்களை அழித்த அதே இடத்தில் அந்த
வெற்றியைப் பதிவு செய்த ராஜபக்ச குடும்பத்தவர்களே (மஹிந்த, கோத்தாபய மற்றும் பஸில் அல்லது நாமல்) தொடர்ச்சியாக நாட்டை ஆள உரிமையுள்ளவர்கள் என்ற
நினைப்புடன் அவர்களை மனதிலிருத்தி ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டது. பலம் உள்ளவர்கள் சொல்வது,
செய்வதுதான் சரி மற்றவர்கள் இதை
விதியென்றோ சரியென்றோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மமதைதான் படைத்
தரப்பிடமும் ஆளும் தரப்பிடமும் இருந்தது.
தையிட்டி விகாரையில் தமிழர்கள் கைவக்க இடமளிக்க மாட்டோம் என்று தற்போது சிங்களத்தின் மீட்பராக தன்னைப் பதிவு செய்ய விமல் வீரவன்ஸ போன்றோருடன் போட்டிபோடும் உதய கம்மன்பில வீரமுழக்கமிடுகிறார். இவரது
வாழ்வில் நிகழ்ந்த மறக்க முடியாத மறக்கக்கூடாத
விடயமொன்றை அவருக்கு நினைவூட்டலுக்காகப் பதிவு செய்கிறோம். இவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றுக்கு யாழ். - கிளிநொச்சி மாவட்டங்களின் சார்பில் 2004இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமரர் ரவிராஜூம்
நண்பர்கள். ஒத்த கருத்துள்ளவர்கள்தான் நண்பர்களாக இருக்க
வேண்டுமென்பது விதியில்லையே. ஒருநாள் உதய கம்மன்பிலவை சந்திக்க ரவிராஜ் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார். அவ்வேளை, உதய கம்மன்பில் அங்கிருக்கவில்லை. சில நிமிடங்களில்
வந்துவிடுவார் என்ற விடயம் ரவிராஜூக்கு
தெரிவிக்கப்பட்டது. எனவே, உதய கம்மன்பிலவின் அலுவலகத்துக்கு
வருகை தருவோருக்கென ஒதுக்கப்பட்ட ஆசனமொன்றில் அவர் அமர்ந்திருந்தார். வாகனமொன்றில் உதய
கம்மன்பில வந்திறங்கியதும் இருவரும் ஒருவரையொருவர் கண்டுகொண்டனர். உடனே, சட்டென எழுந்த ரவிராஜ் அந்த அலுவலகத்தில் பிரத்தியேகமாக உதய கம்மன்பில மட்டுமேஅமரும் ஆசனத்தில் போய் அமர்ந்து கொண்டார். அந்த
அறை வாசலுக்கு வந்த உதய கம்மன்பில,
“நீ எப்படி எனது ஆசனத்தில் அமர்வாய்?”, என்று சற்று அதிகமாகவே கோபத்துடன் கேட்டார். ஆசனத்திலிருந்தவாறே சற்றுக் கேலியாகவே “உன்னுடைய - உனக்கு மட்டுமே சொந்தமான ஆசனத்தில் இரு நிமிடங்கள் மட்டுமே உட்கார்ந்த என்மீது உனக்கு இவ்வளவு கோபம் வருகிறதே. தம்முடைய பரம்பரையான வாழிடங்களில் சொந்த வீட்டில் இருந்து உங்களால் விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக வாழும் தமிழர்களின் மனதில் எவ்வளவு கோபம் இருக்கும் என்று நினைத்துப் பார்”
என்று பதிலளித்தாராம் ரவிராஜ்,
இது
உதய கம்மன்பிலவுக்கு மறக்க முடியாத சம்பவம். ஆனால், அரசியலில் தன்னை மீண்டும் நிலைநிறுத்த வேண்டுமென்றால் - தூய சிங்களவனாக நடிக்க வேண்டுமென்றால் அவர் இப்படித்தான் பேச வேண்டும்.
***
இராணுவத்துக்கான
நிதியோ அல்லது வேறெந்த நிதியோ அதனை வழங்கிய தரப்புகள்
தமது சொந்தக் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத மக்களை சமாதானப்படுத்த அல்லது சாந்தப்படுத்த ஏன் முயற்சிக்கக்கூடாது? படைத்தரப்பால் அழிக்கப்பட்ட
ஆலயங்களை அதே வடிவமைப்புடன் அமைத்து
பக்தியுடன் அவற்றை வழிபட ஏற்பாடு செய்யலாமே. இதே தொகுதியில் தமிழர்களின்
காணிகளில் விவசாயமோ, வேறு தொழிலோ, சுண்ணாம்புக்கல்
அகழ்ந்தெடுக்கப்பட்டோ கொண்டு செல்லப்பட்டதற்கு தமிழர்களுக்கு நியாயமாக வழங்கப்பட்டிருக்க வேண்டிய நிதிதான் இது என்றாவது எண்ணலாமே?
ஒரே விடயத்தை தமிழர்கள் செய்வதற்கும் சிங்களவர்கள் செய்வதற்கும் வெவ்வேறு நீதிகள். சந்திரிகா அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப்பெற உத்தேசித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அறிவித்தார். இந்த நாட்டின் அரசியலை சிறுபான்மையினர் தீர்மானிக்க முடியாது என்று முடிவெடுத்த ஜே. வி. பி.யினர் தாங்கள் அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து சிங்கள - பௌத்தர்களே தாம் என்பதை நிலைநாட்டினர். 1970களில்
தம்மைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்த ஆட்சியினரின் வம்சாவளியினரின் தொடர்ச்சியே இந்த அரசு என
எண்ணவில்லை. கதிர்காம அழகி மன்னம்பேரியை தற்காலிகமாக
மறந்துவிடுவோம் என நினைத்தனர்.அதேபோல
சிறையிலிருந்த ஜே. வி. பி.யினர் அனைவரும் விடுதலையாகினர். பொது மன்னிப்பு என்ற
அறிவிப்பு வெளிவந்ததாக நினைவில்லை. “எங்கள் பகைவர்கள் எங்கோ மறைந்தனர் - இங்குள்ள சிங்களவர் ஒன்றாதல் கண்டே”,
என்று பாடாத குறைதான்.
கடந்த தேர்தலில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ரில்வின் சில்வாவைத் தவிர அனைவரும் சொன்னார்கள். இன்று
’நாங்களா அப்படிச் சொன்னோம் ?’ என்று கேட்கும் நிலை. அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையேஎன்றும்அறிவித்தாயிற்று.
இலங்கை அரசியலைப் பொறுத்தவரை பண்டா - செல்வா, டட்லி - செல்வா என ஒப்பந்தங்களால் தமிழர்கள்
ஏமாற்றப்பட்டதே வரலாறு. எனவேதான் இராணுவச் சிந்தனையோடு அழிக்கப்பட்ட தமிழரின் சகல வழிபாட்டிடங்களையும் விடுவியுங்கள் என
இந்த விவகாரத்தில் தலையிடும் தரப்புகளின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும்.
குறிப்பாக
வழிபாட்டிடங்களுக்கு நிகராக மனமுருகி கண்ணீர் சிந்தி வழிபடும் இடங்கள் என்றால் அவை துயிலும் இல்லங்களே. இவை, இவற்றை
அழிக்கும் வரலாற்றை ஆரம்பித்த சந்திரிகாவினதோ மஹிந்தவினதோ பரம்பரை நிலங்களல்ல. புதைக்கப்பட்ட நிலங்களில் தங்கள் பிள்ளைகளை நினைத்து மனப்பாரத்தை இறக்கி அழுது தீர்க்க எந்தச் சங்கடங்களும் இருக்கக்கூடாதல்லவா? எனவே, அந்த இடங்களில் இருந்து
படையினர் விலகி வழிவிடுவதற்கு கௌதம புத்தர் எந்த
விதத்தில் தடையாக இருப்பார்? அந்தந்தத் துயிலுமில்லங்கள்
அமைந்துள்ள கிராம
அபிவிருத்திச் சங்கங்களின் பொறுப்பில் (RDS) இதனை விடலாமே? எங்களது தேர்தல் வெற்றிக்காகத்தான் இவர்கள் மாண்டார்கள் என நினைக்கும் அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து இழப்புகளைச் சந்தித்த குடும்பத்தினரை விடுவிப்பது புத்தரை எண்ணிச் செய்யும் புண்ணிய காரியம்போல முடிவெடுத்தால் என்ன?
மேலும்,
இந்த விகாரை அமைப்பு விவகாரத்தில் வலி. வடக்கு பிரதேச
சபையின் அப்போதைய தலைவர் மேற்கொண்ட
கோளாறுகளை விபரித்தால் கட்டுரை மேலும் நீண்டுவிடும். அவர் செய்தது சரி என நிரூபிக்கவே இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மௌனம் சாதிக்கிறது.
நல்லூர்க் கந்தன் ஆலயம் என்பதன் வரலாறு தற்போது நாம் காணும் வடிவத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதல்ல. வடிவம் மட்டுமல்ல நிலமும் வேறுதான். முத்திரைச் சந்தியிலுள்ள தேவாலயம் இருக்கும் இடத்தில்தான் முன்னர் நல்லூர் ஆலயம் இருந்தது.
அந்தக் கோவிலை இடித்த அந்நிய ஆட்சியாளர்கள் அதில் கிடைத்த கற்களைக் கொண்டே யாழ்ப்பாணக் கோட்டையைக் கட்டினார்கள். அதற்காக நல்லூர் ஆலயம் எந்த இடத்தில் இருந்ததோ அதில்தான் மீண்டும் அமைய வேண்டும் என்று எமது முன்னோர்கள் அடம்பிடிக்கவில்லை. கோவிலை இடித்தவர்களின் கல்வி முறைகள், மொழிகளை பின்பற்றத் தயங்கவில்லை.
இப்போதிருக்கும் நல்லூர், அமைந்திருக்கும் இடம் உண்மையில் முஸ்லிம்களுக்கே பெருமளவில் சொந்தமானது.
எனினும், இஸ்லாமியர்கள் பெருமனதுடன் சகவாழ்வு கருதி சில உடன்பாட்டுக்கு வந்தனர். அவற்றில் ஒன்று ஆலயத்துக்கு முன்னால் கற்பூரம் விற்கும் உரிமை முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது. யாருக்கு அதை வழங்குவது என்பதை பள்ளிவாசல் தீர்மானிக்கும். இடப்பெயர்வு வரை இந்த நடைமுறை இருந்தது. நல்லூர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்குள் முஸ்லிம் மதகுரு ஒருவரின் ’தைக்கா’(சமாதி) இருந்ததாகக் கூறுகிறார்கள். போத்தல், பித்தளை போன்றவற்றை முன்னர் துவிச்சக்கரவண்டியில் பயணித்து கொள்வனவுசெய்யும்முஸ்லிம்கள்தொழுகை நேரமாயின் நல்லூரின் மேற்கு வாசல் அமைந்திருந்த இடத்தில் நின்று தொழுவதை நம்மில் சிலர் கண்டிருக்கிறோம்.
மீள்குடியமர்வின்
பின்னர், நல்லூர் முதலாளியை சந்தித்த முஸ்லிம்கள் கோயிலுக்கு முன்னால் கற்பூரம் விற்கும் தமது உரிமை பற்றிப்
பிரஸ்தாபித்துள்ளனர். அதற்கு அவர், “அது உங்களது உரிமை.
அதற்கு எவ்விதத் தடையுமில்லை”,
எனக் கூறியதாக அறிகிறோம். எனினும் கோவிலின் வெளியில் இயல்பாக வாழமுடியாத சிலர் (ஊனமுற்றோர், வலது குறைந்தோர் போன்றோர்)
கற்பூரம் விற்பதைக் கண்டுவிட்டு மீளக்குடியமர வந்த உடனேயே இவர்களின்
வாழ்வாதாரத்தில் கைவைப்பதா என் எண்ணினர். ஆனாலும்
இறுதி முடிவு என்ன என்பது தெரியவில்லை.
நல்லூரில் சகவாழ்வு என்றால் என்ன என்பதை முஸ்லிம்கள்
எமக்குக் கற்றுத் தந்துள்ளனர். அதேபோன்று முன்னர் ஆலயம் அமைந்த இடத்தில் தான் மீண்டும் ஆலயம்
அமையவேண்டுமென நாமும் அடம்பிடிக்காமல், எல்லோரது சம்மதத்துடனும் தெரிவுசெய்யப்பட்ட இடத்தில் நல்லூரை அமைத்து, இன்று யாழ்ப்பாணத்தின் அடையாளமாக மாறிவிட்டது. அதனை தையிட்டி விவகாரத்தில் ஏன் முன்மாதிரியாக - பெருந்தன்மையாக உரிய தரப்புகள் எடுக்கக்கூடாது?
இதேவேளை
பெருந்தன்மையை பலவீனம் எனக் கருதி திமிருடன்
செயற்படாமல்,படையினரால் அழிக்கப்பட்ட ஆலயங்கள் மற்றும் துயிலுமில்ல விவகாரங்களில் புதிய அணுகுமுறையை கையாளுமா அநுர அரசு?
நாட்டினுள்
அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்களைப் பேணவும் வழிசமைப்போம் என வட்டுக்கோட்டையில் பிரதமர் ஹரிணி
சூளுரைத்திருக்கிறார். பிரகடனங்களுக்குப் பெயர்போன வட்டுக்கோட்டையில் சொல்லப்பட்டது செயலுருப் பெறுமா? ஏனெனில், பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்துகொள்ளக்கூடாது என்று அண்மையில் இவர் உத்தரவு பிறப்பித்ததாக ஞாபகம். ஆனால், யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இவர் கலந்து கொண்டிருந்தார். மறதிதான் இதற்கும் காரணம் என்றால் வட்டுக்கோட்டையில் இவர் செய்த பிரகடனத்துக்கும் நேரப்போகும் கதி என்னவோ? எனவே வாக்குறுதிகளை வழங்குவதை
விடுத்து தமிழர்களின் வணக்கத்தலங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே காலத்தின் தேவை. கட்சி அரசியலுக்கப்பால் சிந்திப்பார்களா?
Post a Comment